நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் தமிழில் கான்ஜுரிங் கண்ணப்பன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரெஜினா. இந்த படத்தினை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் அஜித், அர்ஜுன், திரிஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை ரெஜினா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விடாமுயற்சி படம் குறித்தும் அஜித் குறித்தும் பேசி உள்ளார். அவர் பேசியதாவது, “விடாமுயற்சி படம் நன்றாக வந்திருக்கிறது. 90 சதவீதம் படப்பிடிப்பு அஜர்பைஜானில் படமாக்கப்பட்டுள்ளது. அந்த படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் என்னுடைய கதாபாத்திரம் வலுவானது. அவ்வளவு பெரிய படத்தில் முக்கியமான கேரக்டரை வழங்கி தயாரிப்பாளர்கள் என் மீதான நம்பிக்கையை காட்டி இருக்கின்றனர். எனவே இது எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. விடாமுயற்சி படத்திற்கு முன் அஜித் சாரை எனக்கு தெரியாது. ஆனால் படப்பிடிப்பு முடிந்த பின் அவரை அனைவரும் சந்திக்க வேண்டும் என்று கூறுவேன். இன்று வரை நான் பார்த்த யாரிடமும் இல்லாத கவர்ச்சியும் வசீகரமும் அஜித் சாரிடம் இருக்கிறது. இயக்குனர் மகிழ் திருமேனி படத்தை சிறப்பாக இயக்கி இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.