வேட்டையன் பணிகள் நிறைவு… ஓய்வுக்காக அபுதாபி பறந்த ரஜினிகாந்த்…
- Advertisement -
வேட்டையன் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினிகாந்த், ஓய்வுக்காக அபுதாபி சென்றிருக்கிறார்.

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது திரைப்படம் வேட்டையன் ஆகும். இத்திரைப்படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கி புகழ்பெற்ற ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் படத்திற்கு இசை அமைக்கிறார். வேட்டையன் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் தொடங்கி மும்பை, புதுச்சேரி, கேரளா, நெல்லை என மாறி மாறி நடைபெற்று வந்தது. மும்பையில் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் கடப்பாவில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து, வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இதில் ரஜினி மற்றும் ராணா டகுபதி இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து, அண்மையில் வேட்டையன் படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினிகாந்த், ஓய்வுக்காக அபுதாபி சென்றுள்ளார். அங்கு சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர், லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம்இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.