அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை ஹெச். வினோத் இயக்கியிருந்த நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் அஜித், மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான், ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன் பின்னர் ஏறத்தாழ இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக சொல்லப்பட்டாலும் இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. அதேசமயம் அஜித், மார்க் ஆண்டனி படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே வெளியாகி படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக படத்தின் அறிவிப்பு போஸ்டரை வெளியிடும்போதே இந்த படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படப்பிடிப்புகளும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் சமீபகாலமாக வெளியாகும் தகவல் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. அதாவது விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாத காரணத்தால் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆகையினால் ரசிகர்கள் விடாமுயற்சி அல்லது குட் பேட் அக்லி ஏதேனும் ஒரு படமாவது பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் ராம்சரணின் கேம் சஞ்சர் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
எனவே கேம் சேஞ்சர் படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருவதால் அதே சமயத்தில் அஜித் படத்தை களம் இறக்கினால் சரியாக இருக்காது என விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு படக் குழுவினரும் பொங்கல் தினத்தில் படத்தை வெளியிட வேண்டாம் என முடிவெடுத்துள்ளனராம். எனவே விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்கள் பொங்கல் ரேஸிலிருந்து விலகி விட்டதாக புதிய தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் தங்களின் ஒவ்வொரு போஸ்டர்களிலும் 2025 பொங்கல் என்று குறிப்பிட்டு வந்த குட் பாட அக்லி படக்குழுவும் படத்தினை 2025 கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- Advertisement -