ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ படப்பிடிப்பு நிறைவு
- Advertisement -
ஆனந்தி நடிக்கும் ஒயிட் ரோஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்தது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனந்தி. இவருக்கு கயல் ஆனந்தி என்ற பெயரும் உண்டு. தெலுங்கில் பஸ் ஸ்டார் என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அவர் அறிமுகமாகினார். இதையடுத்து, பொறியாளன் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் ஆனந்தி. அப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹரிஸ் கல்யாண் நடித்திருப்பார். இதையடுத்து கயல் என்ற படத்தில் நடித்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றது. மேலும், ஆனந்திக்கும் சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

அடுத்து வெற்றிமாறன் இயக்கிய விசாரணை, அதர்வா நடித்த சண்டி வீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா ஆகிய படங்களில் நடித்தார். எனக்கு இன்னொரு பேரு இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, ரூபாய், மன்னர் வகையறா, பரியேறும் பெருமாள் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்து இறுதியாக வெளியான திரைப்படம் ராவண கோட்டம். ஆனந்தி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ஒயிட் ரோஸ். பூம்பாரை முருகன் தயாரிப்பில், ராஜசேகர் இயக்கத்தில் இப்படம் உருவாகி உள்ளது.

திரில்லர் கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகி உள்ளது. படத்தில் ரூசோ, சசிலயா, கணேஷ், ராமநாதன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.