காங்கிரஸ் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் விஜயுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் மற்றும் தேமுதிகவின் கூட்டணி கணக்குகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்து உள்ளதாவது:- திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிற சூழலில் அது கூட்டணியில் தொடருமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது. அது மீண்டு எழுவதுற்கு மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். சுதந்திரத்திற்கு பிறகு 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த கட்சி காங்கிரஸ். காங்கிரசின் வியூக வகுப்பாளர்களும் சரி, ராகுல்காந்தியும் சரி இதுவரை அரசியல் தற்கொலை முடிவுகளை தான் எடுத்து வந்துள்ளனர். காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்க அவர்களுக்கு மாநில கட்சிகளின் தயவு தேவையாகும். தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக என்று ஏதேனும் ஒரு கட்சியின் கூட்டணி அவசியமாகும். ஆனால் காங்கிரஸ் முட்டாள்த்தனமாக பீகார் மாநில அரசியலில் களமிறங்கி லாலு பிரசாத்தின் கட்சியை காலி செய்தனர். அதேபோல், உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவையும் காலி செய்து, தற்கொலை விளையாட்டில் போய் சிக்கி கொண்டனர்.

தற்போது தென் இந்தியாவில் அக்கட்சிக்கு வாழ்வு அளிக்கும் ஒரே கட்சி திமுக. அதை வைத்துக்கொண்டு மத்தியில் ஆட்சிக்கு வர காங்கிரஸ் முயற்சிக்க வேண்டும். அப்போது தான் அவர்களால் மாநிலத்தில் வலுவாக மாற்ற முடியும். ஆட்சியை பிடிக்க முடியும். தமிழ்நாட்டில் எந்த பலமும் இல்லாத பாஜக, மத்தியில் ஆட்சியில் இருப்பதால் தான் எடப்பாடி பழனிசாமியை மிரட்டி கூட்டணி வைக்க முடிந்தது. எதிர்க்கட்சிகளை அமலாக்கத்துறை, சிபிஐ வைத்து அடக்க முடிந்தது. ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் எந்த வித பலமும் இல்லாத காங்கிரசுக்கு யார் கூட்டணியில் இடம் தருவார்கள்? ஆனால் பாஜகவினர், காங்கிரஸ் கட்சியில் உள்ள சில அரை வேக்காடுகளுக்கு பணம் கொடுத்து தூண்டி விடுகிறார்கள். திமுக, காங்கிரஸ் கூட்டணியை உடைத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கிறார்கள். பாஜகவின் சூழ்ச்சிகளை எல்லாம் அறிந்து கொண்டே திமுகவுக்கு குடைச்சல் கொடுத்தால் , ஒரு கட்டத்தில் திமுக தான் தோற்றாலும் பரவாயில்லை. காங்கிரஸ் அழியட்டும் என்று முடிவு செய்து விடும். அப்படி செய்தால் காங்கிரஸ் கட்சி காலியாகிவிடும். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் பிரிந்தால், அவர்களை யாரும் கூட்டணி சேர்க்க மாட்டார்கள். விஜயுடன் கூட்டணி சேர்ந்தால் ஓரிடத்தில் கூட வெல்ல முடியாது. இந்த அரசியல் தெரியாமல் காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகிறார்கள்.

தேமுதிகவில் பிரேமலதாவுக்கு ராஜ்யசபா எம்.பி. சீட்டும் வேண்டும். அதற்காக கடந்த 10 ஆண்டுகளாக அவர் முயற்சித்து வருகிறார். விஜயகாந்துக்காக மக்கள் வாக்களித்தார்கள். அதற்காக பிரேமலதாவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமா? தேமுதிகவுக்கு 1.5 சதவீதம் வாக்குகள் கூட இல்லாத நிலையில் இரட்டை இலக்கத்தில் இடங்கள், ராஜ்யசபா சீட் போன்றவை வேண்டும் என்று கேட்கிறார்கள். திமுகவை பொறுத்தவரை 4 முதல் 6 இடங்கள் வரை தர முன்வந்துள்ளனர். தேர்தல் செலவுக்கு நிதி வழங்குவார்கள். வந்தால் வா, வராவிட்டால் போங்க என்று சொல்லிவிட்டனர். அதேவேளையில் விஜயிடம் அவர்களால் செல்ல முடியாது. காரணம் விஜயகாந்தால் மேலே வந்தவர் விஜய். எனவே காங்கிரசிடம் செல்லலாம் என்று நினைக்கிறார்கள். காங்கிரஸ் ஒருவேளை எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விஜயுடன் கூட்டணிக்கு செல்லலாம். 2029 மக்களவை தேர்தலில் ஜெயிக்கலாம் என்று யாரோ ஆலோசனை கூறியுள்ளனர். அவர்கள் ஊசலாட்டமான மனநிலையில் உள்ள நிலையில், அவர்களுடன் சென்றால் நமக்கும் விஜயிடம் இடம் கிடைக்கும் என்று பிரேமலதா நினைக்கிறார்கள். அப்படி அவர் விஜய் கூட்டணிக்கு சென்றால் அதோடு அவருடைய அரசியல் முடிந்துவிடும்.

கடந்த மக்களவை தேர்தலின்போது 5 கட்சி கூட்டணி, சொந்த ஊர் என்பதால் விருதுநகரில் விஜய பிரபாகரன் அடித்து பிடித்து நெருக்கத்தில் வந்தார். அந்த அளவுக்கு தங்களுக்கு வாக்குகள் இருப்பதாக காட்டிக்கொள்கிறார்கள். காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு சென்றால், திமுக, அதிமுக, பாஜக என மூன்று கட்சிகளும் சேர்ந்து காங்கிரஸ் ஒரு இடத்திற்கு கூட வர விடாமல் செய்துவிடுவார்கள்.அது காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகைக்கும் நன்றாக தெரியும். அதன் காரணமாக அவர் அடக்கி வாசித்து கொண்டிருக்கிறார். கூட்டணி நிலைப்பாட்டில் காங்கிரஸ் இன்னும் ஊசலாடி கொண்டுதான் இருக்கிறது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் ராகுல்காந்தி வெளியில் சொல்லாமலேயே இங்கும் தூண்டி விட்டுக்கொண்டு அங்கும் பேசிக் கொண்டிருக்கிறார். ராகுல்காந்தி ஒவ்வொரு மாநிலமாக சென்று கட்சியை காலி செய்துவிட்டு, வெளிநாட்டில் போய் செட்டில் ஆகப் போகிறாரா? என்கிற கேள்வியும் எழுகிறது. எப்படியாக இருந்தாலும் இன்னும் 10 நாட்களில் கூட்டணிகள் தெரிந்துவிடும். பொறுத்திருந்து பார்ப்போம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


