தனுஷ் பட இயக்குனர் எஸ்.எஸ். ஸ்டான்லி காலமானார்.
கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த், சினேகா ஆகியோரின் நடிப்பில் வெளியான ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எஸ்.எஸ். ஸ்டான்லி. இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து இவர் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். இது தவிர இவர், ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்க்கார், ஆண் தேவதை போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் எஸ்.எஸ். ஸ்டான்லி. அடுத்தது இவர் ஆதாம் ஆப்பிள் எனும் திரைப்படத்தை இயக்க முயற்சி செய்த நிலையில் அந்த படம் கிடப்பில் போடப்பட்டது. அதே சமயம் இவர் சில மாதங்களுக்கு முன்னர் சிறுநீரக பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது 57 வயதுடைய இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இன்று (ஏப்ரல் 15) மாலை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் எஸ்.எஸ். ஸ்டான்லியின் இறுதி சடங்குகள் நடைபெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது.