நடிகர் துருவ் விக்ரம் பைசன் படம் குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் ஆதித்யா வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் துருவ் விக்ரம். அதைத் தொடர்ந்து இவர், மகான் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர், ‘பைசன்’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆதித்யா வர்மா, மகான் ஆகிய படங்களை விட பைசன் திரைப்படம் தான் துருவ் விக்ரமுக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தரும் என நம்பப்படுகிறது. ஏனென்றால் இயக்குனர் மாரி செல்வராஜ், ‘பைசன்’ படத்தில் துருவ் விக்ரமை வேறொரு பரிமாணத்தில் காட்டியுள்ளார். மாரி செல்வராஜின் முந்தைய படங்களைப் போல் இந்த படமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஏற்கனவே இதன் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வருகின்ற அக்டோபர் 17 தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கும் இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகளையும் படக்குழு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய துருவ், பைசன் படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “என் பெயர் துருவ். நான் இதுவரை இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன். அந்த இரண்டு படங்களையும் நீங்கள் பார்க்கவில்லை என்றால் அது பிரச்சனை இல்லை. ஆனால் பைசன் படத்தை நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். ஏனென்றால் இதுதான் என்னுடைய முதல் படம். அந்த படத்திற்காக என்னுடைய நூறு சதவீத உழைப்பை கொடுத்திருக்கிறேன் என நம்புகிறேன்.
தியேட்டரில் பார்க்கும்போது அதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் நான் நூறு சதவீதம் உழைப்பை கொடுத்திருக்கிறேனா? இல்லையா? என்று. ஆனால் என்னையும் தாண்டி, எல்லாரையும் தாண்டி இயக்குனர் மாரி செல்வராஜ் இறங்கி சம்பவம் செய்திருக்கிறார். அந்த சம்பவம் உங்க எல்லாருக்கும் போய் சேரனும். எல்லாரும் குழந்தைகள், குடும்பத்துடன் இந்த படத்தை பாருங்க” என்று தெரிவித்துள்ளார்.