கோல்டன் குளோப் 2024 விருதுகள்… அள்ளிச் சென்ற ஓப்பன்ஹைமர்…
- Advertisement -
அமெரிக்காவில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருது விழாவில், ஓப்பன்ஹைமர் திரைப்படம் பல விருதுகளை வென்று குவித்து சாதனை படைத்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது விழாவிற்கு முன்பாக கோல்டன் குளோப் விருது வழங்கப்படுவது வழக்கமாகும். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்த விழா நடைபெற்றது. உலகெங்கும் உள்ள ரசிகர்களின் பார்வை தற்போது இந்த நிகழ்ச்சியின் மீது உள்ளது. இந்த விழாவில் பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படங்கள் மற்றும் நடிகர், நடிகைகள் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது இறுதியாக கோல்டன் குளோப் விருதுகளை வென்ற திரைப்படங்கள், நடிகர், நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், ஓப்பன்ஹைமர் படத்திற்காக ராபர்ட் டவுனி என்பவர் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார். அதேபோல, இப்படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன் சிறந்த இயக்குநருக்கான விருதை தட்டிச் சென்றார். மேலும், இது அவருக்கான முதல் கோல்டன் குளோப் விருது ஆகும். இது மட்டுமில்லாமல், சிறந்த நடிகருக்கான விருது ஓப்பன்ஹைமர் படத்தில் நடித்த நடிகர் சில்லியன் மர்பிக்கு கொடுக்கப்பட்டது. மேலும், சிறந்த ஸ்கோர் மோஷன் பிக்சர் மற்றும் சிறந்த மோஷன் டிராமா பிக்சர் ஆகிய விருதுகளையும் ஓப்பன்ஹைமர் படம் பெற்றது.

இத்திரைப்படம் அமெரிக்க இயற்பியல் ஆராய்ச்சியாளர் ஜேவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட பயோபிக் ஆகும். அனுகுண்டின் தந்தை எனப்படும் ராபர்ட் ஓபன்ஹைமரின் வாழ்க்கை குறித்த படமாகும்.