நடிகர் ஃபகத் பாசில் தற்போது தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து கலக்கி வருகிறார். அதேபோல் நஸ்ரியாவும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கும் நிலையில் திருமணத்திற்கு பிறகு சில நாட்கள் சினிமாவை விட்டு விலகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் நடித்து வருகிறார் நஸ்ரியா. இவ்வாறு இருக்கும் சூழலில் ஃபகத் பாசில் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் இணைந்து சமீபத்தில் இசையமைப்பாளர் சுசின் சியாம் திருமணத்திற்கு சென்றிருந்தனர். கும்பலாங்கி நைட்ஸ், மஞ்சும்மெல் பாய்ஸ், ஆவேஷம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருந்த சுசின் சியாமின் திருமணம் திருவனந்தபுரம் அருகே இருக்கும் திருப்பணித்தூரா ஸ்ரீ பூர்ணத்ரேஷயா கோவிலில் வைத்து நடைபெற்றது. இவர்களின் திருமணம் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் நடைபெற்ற நிலையில் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது. அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்த அதே நேரத்தில் சர்ச்சை ஒன்றும் வெடித்துள்ளது. ஏனென்றால் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் எப்படி கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள் என்று வலது சாரி சிந்தனை கொண்டவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக வலதுசாரி சிந்தனையாளரும், வழக்கறிஞருமான கிருஷ்ணராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் செல்வது தவறு. தண்டனைக்குரியது. பெரும்பாலான கோவில் நிர்வாகங்கள் பிற மதத்தினர் கோவிலுக்குள் நுழைவதை தடுக்க முன் வருவது கிடையாது. இது இந்துக்களின் மாநிலம். இந்துக்கள் தான் கோவிலை நிர்வகித்து வருகிறார்கள். பிற மதத்தினர் கோவிலுக்குள் நுழைவது இந்துக்களின் நம்பிக்கை மற்றும் அவர்களின் பாரம்பரியத்தை சீர்குலைக்கும் செயலாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வழக்கறிஞர் கிருஷ்ணராஜ் வெளியிட்டுள்ள இந்த பதிவிற்கு சிலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும் சிலர் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது குறித்து ரசிகர்களும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.