அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து இவர் விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் படமானது 2024 டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார்.இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வெளியான போதிலே இப்படம் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து சுனில், ரெடின் கிங்ஸ்லி, நஸ்லேன், ராகுல் தேவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் கசிந்திருந்தது. அதன் பின்னர் சமீபத்தில் வெளியான தகவலின் படி இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இது அடுத்த கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் பாடலை பால் டப்பா பாடியிருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. இனிவரும் நாட்களில் இதன் முதல் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.