
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘இம்மார்டல்’ (Immortal) திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
செப்டம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
இசைத்துறையிலும் நடிப்புத்துறையிலும் முத்திரை பதித்து வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் இளைஞர்களின் ஃபேவரைட் நடிகையான காயாடு லோகர் (Kayadu Lohar) ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘இம்மார்டல்’. வித்தியாசமான கதைக்களத்துடன், பிரம்மாண்டமான பின்னணியில் உருவாகி வரும் ‘இம்மார்டல்’ திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இத்திரைப்படம் விரைவில் (ஜூலை 23) திரைக்கு வரவிருந்த நிலையில், தற்போது இதன் ரிலீஸ் தேதியை செப்டம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்!
தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ வரும் 23-ஆம் தேதி (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதேபோல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ மற்றும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சுதீப் கிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ படங்களும் ஜூலை 31ம் தேதி வெளியாகிறது. ஒரே நேரத்தில் பெரிய படங்கள் வெளியாவதால் திரையரங்குகள் பிரிவதைத் தவிர்க்கவும், படத்திற்கான போதிய தியேட்டர்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் ‘இம்மார்டல்’ படத்தின் வெளியீட்டைச் செப்டம்பர் மாதத்திற்குப் படக்குழுவினர் தள்ளிவைத்துள்ளனர்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், “தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகனும்..! அதுவும் ஒன் லாஸ்ட் டைம்.. ‘ஜனநாயகன்’ படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.. “ என்று குறிப்பிட்டுள்ளார்.
Thalapathy vandha thalli poyi dhaaney aaganum ❤️❤️ adhuvum one
Last time ❤️ …. Best of luck team JN …#immortal will release in theatres on September 4th with ur support and love … @AKfilmfactory @DirMari_Chinna @thinkmusicindia pic.twitter.com/E8UC01vNwX— G.V.Prakash Kumar (@gvprakash) July 15, 2026
