நகைச்சுவை நடிகர்களான வடிவேலு மற்றும் சிங்கமுத்து ஆகிய இருவரும் இணைந்து திமிரு, பம்பரக் கண்ணாலே, ஈர நிலம், ஜனனம் போன்ற பல படங்களில் நடித்திருக்கின்றனர். இவர்கள் இணைந்து நடித்திருந்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இப்படி இருக்கும் சூழலில் நடிகர் சிங்கமுத்து பேட்டி ஒன்றில், “வடிவேலுவின் வெற்றிக்கு நான்தான் காரணம். அவர் பணமும் புகழும் சம்பாதித்தது என்னால்தான்” என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து நடிகர் வடிவேலு சிங்கமுத்து மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அதன்படி ஐந்து கோடி ரூபாய் வரை மான நஷ்ட ஈடு வழங்கும் படியும் தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார் வடிவேலு. இந்த வழக்கு இன்று (அக்டோபர் 3) விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கினை நீதிபதி டீக்காராமன் விசாரணை செய்தார். அப்போது வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சிங்கமுத்து தரப்பிலிருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “வடிவேலு தனது மனைவி அவருக்கு எதிராக பேசிய அவதூறு வார்த்தை எது என்பதை குறிப்பிடவில்லை. அவருக்கு மன உளைச்சலை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் எந்த கருத்தையும் சொல்லவில்லை. என்னுடைய சொந்த அனுபவத்தையும் திரைத்துறையைச் சார்ந்தவர்களின் கருத்துக்களையும் மட்டுமே அந்த பேட்டியில் தெரிவித்திருந்தேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பேட்டியில் அப்படி பேசியதற்காக வருத்தம் தெரிவித்த பின்னரும் கூட தன்னை துன்புறுத்தும் நோக்கத்தில் நடிகர் வடிவேலு, இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார் என்று சிங்கமுத்து பதில் மனுவில் குற்றம் சாட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.