சூர்யா நடிப்பில் இரண்டு வருடங்கள் கழித்து வெளியாக இருக்கும் திரைப்படம் கங்குவா. இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க சிறுத்தை சிவா படத்தை மிகவும் பிரம்மாண்டமாக இயக்கியிருக்கிறார். இந்த படம் சூர்யாவின் 42வது படமாகும். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், கோவை சரளா, யோகி பாபு, திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் கங்குவா திரைப்படத்தில் நடிகர் கார்த்தி வில்லனாக நடிக்கிறார் என்று கிட்டத்தட்ட உறுதியான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் படத்தின் டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி உள்ளது. எனவே படக்குழுவினர் அறிவித்தபடி வருகின்ற அக்டோபர் 10 அன்று கங்குவா திரைப்படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் அதே அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தான் ரஜினியின் தீவிர ரசிகர். அதனால் ஒருபோதும் ரஜினியுடன் மோத மாட்டேன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஆகையினால் சமூக வலைதளங்களை ரசிகர்கள் பலரும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுமா? என்று விவாதித்து வருகின்றனர். ஆகையினால் வேட்டையன், கங்குவா இரண்டு படங்களும் ஒரே நாளில் மோத போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.