பிரபாஸ் நடிக்கும் தி ராஜாசாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் பிரபாஸ், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இவரது நடிப்பில் கடைசியாக கல்கி 2898AD திரைப்படம் வெளியாகி அதிக வசூலை வாரி குவித்தது. இதைத் தொடர்ந்து பிரபாஸ், கண்ணப்பா, ஸ்பிரிட், சலார் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், மாருதி இயக்கத்தில் தி ராஜாசாப் எனும் திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். அதன்படி பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் பிரபாஸுடன் இணைந்து மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படமானது காமெடி கலந்த ஹாரர் ஜானரில் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படமானது 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இதன் புதிய ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதாவது 2025 டிசம்பர் 5ஆம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் பிரபாஸ் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் விரைவில் படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.