அதர்வா நடிப்பில் உருவாகும் டிஎன்ஏ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் அதர்வா தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தவிர இதயம் முரளி படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், டிஎன்ஏ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அதர்வாவுடன் இணைந்த நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், சேத்தன், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க நெல்சன் வெங்கடேசன் இதை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இதற்கு இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலுக்கும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கின்றனர். பார்த்திபன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படத்திலிருந்து டீசர், போஸ்டர்கள், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதேசமயம் 2025 ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி இப்படமானது ஜூன் 20 ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. அதே நாளில் தனுஷின் குபேரா திரைப்படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.