தென்னிந்திய திரை உலகில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் ஆரம்பத்தில் ஒரு இயக்குனராக தனது திரை பயணத்தை தொடங்கியவர்.
அதன்படி நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில் போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதே சமயம் நடிப்பிலும் ஆர்வமடைய இவர் சுப்ரமணியபுரம், சாட்டைப் போன்ற படங்களில் நடித்து பெயர் பெற்றார். அதைத்தொடர்ந்து அப்பா எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைய அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கினார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் குணச்சித்திர வேடங்களில் மட்டுமல்லாமல் வில்லனாகவும் களமிறங்கி அசத்தியுள்ளார். இருப்பினும் சமுத்திரக்கனி கடந்த 9 ஆண்டுகளில் வெறும் 4 படங்களை மட்டுமே இயக்கியுள்ள தகவல் ரசிகர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தான் இது சம்பந்தமாக பேசிய சமுத்திரக்கனி, அப்பா படத்தை இயக்கி திரையரங்குகளில் வெளியிட முடியாமல் தவித்ததாகவும் சிறிய பட்ஜெட் படங்களை வெளியிடுவதில் பல சிக்கல்கள் இருக்கும் காரணத்தால் தான் படங்களை இயக்காமல் நடிப்பில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது சமுத்திரக்கனி யாவரும் வல்லவரே, அரிசி, திரு. மாணிக்கம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


