இயக்குனர் எம். ராஜேஷ் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் எம் ராஜேஷ், சிவா மனசுல சக்தி 2 படம் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார். அதாவது கடந்த 2009ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் எம்.ராஜேஷ்.
இந்த படத்தில் ஜீவாவுடன் இணைந்த அனுயா, ஊர்வசி, சந்தானம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படத்தில் ஜீவா மற்றும் சந்தானம் ஆகிய இருவரின் காமெடிகளும் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது. மேலும் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய எம். ராஜேஷ், சிவா மனசுல சக்தி 2 படம் குறித்து ஜீவாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அதற்கான ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படம் பக்கா கமர்சியல் என்டர்டெயினர் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தினை நடிகர் ஜீவா தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -