கல்கி படத்திற்கு டப்பிங்கை தொடங்கினார் கமல்ஹாசன்
- Advertisement -
கல்கி திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை, நடிகர் கமல்ஹாசன் தொடங்கி இருக்கிறார்.
தெலுங்கில் டாப் இயக்குநராக வலம் வருபவர் நாக் அஸ்வின். இவர் கீர்த்தி சுரேவை வைத்து நடிகையர் திலகம் என்ற வெற்றித்திரைப்படத்தை கொடுத்தார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கில் மாபெரும் ஹிட் அடித்ததோடு, தேசிய விருதுகளை அள்ளிகக் கொடுத்தது. இத்திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸை வைத்து கல்கி 2898 ஏ.டி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் பிரபாஸூக்கு வில்லனாக கமல்ஹாசன் நடிக்கிறார். மேலும், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழில் டாப் இசை அமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் கல்கி படத்திற்கு இசை அமைக்கிறார். மகாபாரதத்தை தழுவி சயின்ஸ் பிக் ஷன் படமாக பிரமாண்டமாய் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் பின்னணி வேலைகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அத்துடன் படத்திற்கான புரமோசன் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இந்நிலையில், கல்கி படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி இருக்கிறார். படம் வௌியாக ஒரு சில நாட்களே உள்ள நிலையில், தற்போது தான் டப்பிங் பணிகள் தொடக்கமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இது, கல்கி அடுத்த பாகத்திற்கான டப்பிங் பணிகளாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்தில் தான் கமல்ஹாசன் இடம்பெறும் காட்சிகள் அதிகம் உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.