கங்குவா திரைப்படத்தில் சூர்யா இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது. அதிக பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படம் 3D அனிமேஷனில் ஒரு வரலாற்று சரித்திர திரைப்படமாக தயாராகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் ராஜமுந்திரில் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதை தொடர்ந்து தாய்லாந்து காட்டுப் பகுதியில் நடைபெற்றது. அடுத்து, சென்னையை அடுத்துள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. அப்போது, ரோப் கேமரா அறுந்து விழுந்ததில், நடிகர் சூர்யா காயம் அடைந்தார். 10 அடிக்கு மேல் இருந்த ரோப் கேமரா திடீரென அறுந்து விழுந்ததில், சூர்யாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கங்குவா படத்தில் சூர்யா இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்ததாக படத்தில் வில்லனாக நடிக்கும் பாபி டியோல் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். அவர் இடம்பெறும் காட்சிகள் ஆந்திராவில் உள்ள கடப்பாவில் படமாக்கப்பட உள்ளது. இதனிடையே, நடிகர் சூர்யா ஓய்வு எடுக்க தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் சேர்ந்து மும்பை சென்றுள்ளார்.