கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கவின். அதை தொடர்ந்து சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றிய இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தார். அதுமட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் கால் பதித்து லிப்ட், டாடா ஆகிய வெற்றி படங்களை கொடுத்து தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். இதன்பிறகு கவினுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. அதன்படி தற்போது ‘மாஸ்க்’ என்ற படத்தையும், ‘கவின் 09’ என்ற படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இது தவிர நயன்தாராவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் படத்தில் நடித்துள்ளார்.
ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் பிரீத்தி அஸ்ராணி, பிரபு, தேவயானி, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். நேற்று (செப்டம்பர் 19) உலகம் முழுவதும் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலக அளவில் ரூ.70 லட்சத்திற்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என புதிய தகவல் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


