திரை உலகின் முக்கியமான இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தனது அடுத்த படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார். அதாவது கமல்ஹாசன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மணிரத்னம் மற்றும் அவரது மனைவி சுஹாசினி, திரை உலகின் முன்னணி இயக்குனர்களான சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், ஏ ஆர் முருகதாஸ், கார்த்திக் சுப்புராஜ், சசி, லிங்குசாமி, லோகேஷ் கனகராஜ் ஆகியோரை தங்களது வீட்டிற்கு அழைத்து உபசரித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது இவர்கள் அனைவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து இயக்குனர் சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” இந்த இனிய மாலைப் பொழுதற்காக நன்றி மணி சார். புகழ்பெற்ற இயக்குனர்களை சந்தித்து அவர்களுடன் இளையராஜா மற்றும் ஏ ஆர் ரகுமான் ஆகியோரின் எவர்கிரீன் பாடல்களைப் பாடி பல நினைவுகளை பகிர்ந்து கொண்டோம். இதுதான் நாம் சம்பாதித்த உண்மையான சொத்து என்று உணர்கிறேன். சுஹாசினி உங்கள் உபசரிப்புக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. தனது முதல் படத்திற்காக சிறந்த இயக்குனர் விருதையும் இயக்குனர் சங்கர் பெற்றுள்ளார். ஜென்டில்மேன் திரைப்படம் இன்றளவும் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பேசப்படுகிற படமாகும். இந்நிலையில் இயக்குனர்களின் சந்திப்பில் மணிரத்தினம் தலைமையில் முன்னணி இயக்குனர்கள் இணைந்து சங்கருக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.