கமல்ஹாசனின் தக் லைஃப்… இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிம்பு…
- Advertisement -

பொன்னியின் செல்வன் திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் புதிய திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடிக்க, அவருடன் இணைந்து, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், அபிராமி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ரவி.கே.சந்திரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் சுமார் 3 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. ராஜ்கமல் நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கின்றன.
முதலில் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த துல்கர் சல்மான், ஜெயம்ரவி கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகினர். இதனால் துல்கர் சல்மானுக்கு மாற்றாக சிம்புவும், ஜெயம்ரவிக்கு மாற்றாக அசோக் செல்வனும் தக் லைஃப் திரைப்படத்தில் இணைந்தனர். இந்தி நடிகர்கள் அலி ஃபஸல், பங்கஜ் திரிபாதி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

டெல்லி, ராஜஸ்தான், புதுச்சேரி, என மாறி மாறி பல இடங்களில் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தில் சிம்பு தொடர்பான காட்சிகளுக்கான படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாகவும், இதற்காக 25 நாட்களுக்கு சிம்பு கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்துடன், தக் லைஃப் படப்பிடிப்பும் விரைவில் முடிவடைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வௌியிட இருப்பதாகவும் தெரிகிறது.