பிரபாஸ் நடிப்பில் ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிப்பதாகவும், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைக்கிறார்.
சயின்ஸ் ஃபிக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியீட்டு விழா அமெரிக்காவில் பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும் இந்திய திரை உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் பான் இந்திய அளவில் உருவாகி வரும் படங்களில் ப்ராஜெக்ட் கே திரைப்படம் முக்கியமான ஒன்றாகும்.
அந்த வகையில் இந்தப் படம் சம்பந்தமான முக்கியமான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அதன்படி, ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது என செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் வில்லனாக நடிக்கும் கமல்ஹாசன் ப்ராஜெக்ட் கே முதல் பாகத்தின் கிளைமாக்சில் தான் திரையில் தோன்றுவார் என்றும் அந்த காட்சி பிரபாஸ் வில்லனை அழிப்பதற்காக எதிர்காலத்துக்கு பயணிக்கும் படியான ஒரு காட்சியாக இருக்கும் என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.