சூர்யா நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள படம் தான் கங்குவா. இந்த படத்தினை பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தினை தயாரித்திருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையிலும் வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவிலும் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல், நட்டி நடராஜ், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே நிறைவடைந்து ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே படமானது வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கத்தில் இன்று (அக்டோபர் 26) மாலை 6 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சூர்யா, சிறுத்தை சிவா, சிவக்குமார், மதன் கார்கி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பேசிய மதன் கார்கி, “புஷ்பா படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் நேரத்தில் சிவா சார் கங்குவா கதையை சொன்னார். இந்த படத்தில் கற்பனை செய்ய முடியாத காட்சிகள் நிறைய இருக்கிறது. மிலன் சாரின் செட் ஒர்க் மற்றும் வெற்றி சாரின் ஒளிப்பதிவு ஆகியவை அனைத்தும் அற்புதமாக இருந்தது. பனிப் புகையிலிருந்து கேமராவை கொண்டு வந்து மேஜிக் செய்து இருப்பார் வெற்றி சார். இந்த படம் மிகப்பெரிய அளவில் பேசப்படும்” என்று தெரிவித்துள்ளார்.