மதராஸி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியான படம் மதராஸி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடித்திருந்தார். மேலும் வித்யூத் ஜம்வால், விக்ராந்த், பிஜு மேனன், சபீர் கல்லாரக்கல் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படமானது காதல் கலந்த அதிரடி ஆக்சன் படமாக வெளியானது. படத்தில் சிவகார்த்திகேயன் முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக அசத்தியுள்ளார். அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு பலம் தந்துள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் நீண்ட இடைவெளிக்கு பிறகு விறுவிறுப்பான திரை கதையுடன் சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார். எனவே மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் சில ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களையும், சில ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. அடுத்தது இப்படம் வெளியான முதல் நாளில் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த படம் முதல் நாளில் ரூ.20 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இனிவரும் நாட்களில் இதன் வசூல் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.