ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை வென்று அசத்தியுள்ளது. ஒரிஜினல் பாடல் பிரிவில் எம்.எம்.கீரவாணி இசையமைத்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருது நாமினேஷனிலும் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பிடித்துள்ளது.

இந்நிலையில் ‘நாட்டு நாட்டு’ என்ற சிறந்த அசல் பாடலுக்காக கோல்டன் குளோப் விருதை வென்ற ஆர்ஆர்ஆர் குழுவினர் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகச்சிறப்பான சாதனை! எம் எம் கீரவாணி, பிரேம் ரக்ஷித், கால பைரவா, சந்திரபோஸ், ராகுல் சிப்லிகுஞ்ச் ஆகியோருக்கு பாராட்டுக்கள். எஸ் எஸ் ராஜமௌலி, ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்பட அனைவருக்கும் நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மதிப்புமிக்க கௌரவம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடைய செய்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் நாட்டு நாட்டு பாடலின் மூலம் கோல்டன் குளோப் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர் திரைப்படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் வரலாறு படைத்து ஆஸ்கர் பிரிவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள காஷ்மீர் பைல்,இரவின் நிழல்,ஆர்.ஆர்.ஆர், காந்தாரா, ராக்கெட்டரி போன்ற திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுகள் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும், மேலும் கடும் உழைப்பினால் உலக அளவில் நம் இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்த திரைப்படக்குழுவினருக்கும் குறிப்பாக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.