சினிமா பிரபலத்தை விட அரசியல்வாதி வாழ்க்கை கடுமையானது – கங்கனா ரணாவத்
- Advertisement -
சினிமா பிரபலங்களை விட அரசியல்வாதிகளின் வாழ்க்கை மிகவும் கடுமையானது என்று நடிகையும், எம்.பி.யுமான கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரணாவத். தமிழில் தாம்தூம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் தமிழில் அடுத்தடுத்து படம் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தலைவி படத்தில் நடித்தார். அடுத்து, பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடித்தார். இத்திரைப்படத்தில் லாரன்ஸூடன் இணைந்து ஜோடியாக நடித்திருந்தார்.

இதனிடையே அவர் அரசியலிலும் ஆர்வம் செலுத்தினார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கித்தவிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். தற்போது நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் ஹிமாச்சல் மாநிலம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். சினிமாவை தவிர்த்து அவர் அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்தார். இதனிடையே தேர்தல் முடிவடைந்து டெல்லி செல்வதற்காக அவர் சண்டிகர் விமான நிலையம் சென்றபோது, அவரை மத்திய தொழில் பாதுகாப்புப்படை பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் கன்னத்தில் அறைந்தார்.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும், பெண் காவலருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தனர்.

இந்நிலையில், திரைப்பிரபலத்தை விட அரசியல்வாதிகள் வாழ்க்கை மிகவும் கடுமையானது என கங்கனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தனது முதல் படமான கேங்ஸ்டர் படத்திற்கு பிறகு தான் அரசியலில் சேர நினைத்ததாக கூறினார். ஆனால், தன் அரசியல் கனவு தற்போது நிறைவேறி விட்டதாகவும் தெரிவித்தார். தற்போது புதிதாக எம்பி பதவி கிடைத்துவிட்டதும், முன்னதாக அவர் செய்து கொண்டிருந்த நடிப்பை கீழ் இறக்கி பேசுவதாக கங்கனாவை, நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.