Homeசெய்திகள்சினிமாநெல்சன், சூப்பர் ஸ்டாரின் தரமான சம்பவமா ஜெயிலர்?.....விமர்சனம் இதோ

நெல்சன், சூப்பர் ஸ்டாரின் தரமான சம்பவமா ஜெயிலர்?…..விமர்சனம் இதோ

-

பெரிய எதிர்பார்ப்போடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் நேற்று உலகம் எங்கும் வெளியாகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்துள்ளது. நெல்சனின் முந்தைய படங்களில் வரும் கதாநாயகர்கள் போலவே இப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கும் ரஜினிகாந்த் மிக சாதுவாக இருப்பது போன்ற ஒரு மனிதன். மனைவி, நேர்மையான போலீஸ் அதிகாரி மகன், மருமகள், 96 சப்ஸ்கிரைபர்களை வைத்துக் கொண்டு குட்டி யூட்யூபராக அலப்பறை செய்யும் பேரன் என சாந்தமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். ஒரு கட்டத்தில் போலீஸ் அதிகாரியான மகன் வசந்த ரவிக்கும் சிலை கடத்தும் கும்பலான வில்லன் கேங்கிற்குமான பிரச்சனையால் ரஜினி களத்தில் இறங்க நேரிடுகிறது. அதிலிருந்து படம் சூடு பிடிக்கிறது.

ஒரு பக்கம் குடும்பத்தை காக்க வேண்டும் மற்றொருபுறம் வில்லன் கேங்கை வேரறுக்க வேண்டும் என நகரும் கதையில் சில சில திருப்பங்களோடு, கிளைமாக்ஸ்-ல் ரசிகர்களுக்கு முழு திருப்தி கொடுத்து படத்தை முடித்துள்ளனர்.
படத்தின் முதல் பாதியில் யோகி பாபு, ரஜினி காம்பினேஷன் வரும் காமெடிகள் அனைத்தும் திரையரங்குகளில் சிரிப்பு மழை. காமெடிக்கு என தனி ட்ராக் இல்லாமல் காட்சிகளிலேயே காமெடியை கையாண்டிருப்பது இயக்குனர் நெல்சனின் டச். வில்லனாக நடித்திருக்கும் விநாயகன் தன் பங்கினை சிறப்பாக செய்துள்ளார். அவருடைய கண்களும் உடல் மொழியும் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி போகிறது. ரஜினிகாந்த்தும் விநாயகனுக்கும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும்படியான காட்சிகள் அனைத்தும் கிளாப்ஸ் ரகம்.

படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷரப் அனைவருக்கும் பேருக்கு என ஒரு காட்சியை வைக்காமல் மாஸான காட்சியை வைத்துள்ளார் இயக்குனர் நெல்சன். தெலுங்கு நடிகர் சுனிலுக்கு மட்டும் காமெடி கலந்த கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாதி மின்னல் வேகத்தில் நகர்ந்து ஒரு மிரட்டலான இடைவேளை என அதகளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாதியில் மெதுவாக தொடரும் கதையில் ஆங்காங்கே சில தொய்வுகள் இருந்தாலும் பெரிதாக போரடிக்காமல் திரைக்கதை நகர்ந்தது படத்திற்கு பக்க பலம்.

பான் இந்தியா படம் என்பதற்கு ஏற்ப ஒரு உண்மையான பான் இந்தியன் கிளைமாக்ஸ் கட்சியை வைத்துள்ளார் இயக்குனர் நெல்சன். நிச்சயமாக அந்தந்த நடிகர்களின் ரசிகர்களுக்கு கிளைமாக்ஸ் காட்சி ஒரு கூஸ்பம்ப் மொமெண்டாக இருக்கும். சரியான நடிகர்கள் தேர்வு, நேர்த்தியான திரைக்கதை, அசத்தலான கிளைமாக்ஸ் என பல பாசிட்டிவ்கள் ரசிகர்களை கவர்கிறது. இவை எல்லாவற்றிற்கும் ஹைலைட்டாக ஒவ்வொரு காட்சியிலும் மாஸ் வொர்க் அவுட் ஆக உதவி இருப்பது ஒளிப்பதிவும் அனிருத்தின் பின்னணி இசையும். சில வன்முறை காட்சிகள் படத்தில் இருந்தாலும் குடும்பத்தோடு திரையரங்குகளில் பார்த்து மகிழக்கூடியதாக அமைந்துள்ள படம் தான் இந்த ஜெயிலர்.

MUST READ