ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதே சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்திலும் நடித்து வந்தார் ரஜினி. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடிகர் ரஜினி திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தொடர்ந்து ரஜினிக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவரது இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் அந்த வீக்கம் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டு ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினி நேற்று (அக்டோபர் 3) இரவு 11 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார். அடுத்ததாக மருத்துவர்களின் பரிந்துரையின்படி நடிகர் ரஜினி சில வாரங்கள் ஓய்வெடுக்க இருக்கிறார்.
அதன் பின்னரே கூலி படப்பிடிப்பில் இணைவார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே லோகேஷ் கனகராஜ் மற்ற நடிகர்களின் போர்ஷன்களை படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -