இமயமலை பயணம் மேற்கொண்ட ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ‘கூலி’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில் ரஜினி, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அதன்படி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் கேரளாவிலும் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி திரைக்கு வரும் என ரஜினி அறிவித்துள்ளார். அதன்படி ரஜினி, ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டது போல் தெரிகிறது. இந்நிலையில் தான் ரஜினி, இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். அதாவது ரஜினி, தான் நடிக்கும் படங்கள் திரைக்கு வருவதற்கு முன்பாக இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்வது வழக்கம். எனவே ‘ஜெயிலர் 2’ படத்தை முடித்த ரஜினி ஒரு வார காலம் ஆன்மீகப் பயணமாக இமயமலைக்கு சென்று இருக்கிறார். ஆன்மீகவாதிகளுடன் அவர் மேற்கொண்டுள்ள இந்த பயணத்தில் ரிஷிகேஷ் ஆசிரமத்திலிருந்து பத்ரிநாத், பாபா குகை போன்ற இடங்களுக்கு செல்கிறார்.
அப்போது செல்லும் வழியில் ரஜினி, தனது நண்பர்களுடன் இணைந்து சாலையில் நின்று உணவு அருந்துவது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே வைரலாகி வந்த நிலையில், இன்னும் சில புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.