மும்பையின் பாந்த்ராவில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீது கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் இன்று ஒரு மரத் தொழிலாளியை ( தச்சரை) விசாரித்தனர். வாரிஸ் அலி சல்மானி என அடையாளம் காணப்பட்ட தச்சரின் தோற்றம், ஊடுருவும் நபரைப் போலவே இருந்ததால், விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்றனர்.
சைஃப் அலி கானை தனது பாந்த்ரா வீட்டிற்குள் பல முறை கத்தியால் குத்திய நபர், சிவப்பு நிற ஸ்கார்ஃப் அணிந்து, ஒரு பையை எடுத்துச் சென்று ‘சத்குரு ஷரன்’ அடுக்குமாடி குடியிருப்பில் ஆறாவது மாடியில் இருந்து படிக்கட்டுகளில் வேகமாக இறங்கியது தெரிந்தது.சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சைஃப் அலிகானின் பிளாட்டில் சல்மானி வேலைக்கு வந்துள்ளார். அவரை வேலைக்கு அமர்த்திய ஒப்பந்ததாரர் தாக்குதல் குறித்து அவருக்குத் தெரிவித்ததாக தகவல் வெளியானது. தாக்குதல் நடத்தியவரைக் கண்டுபிடித்து கைது செய்ய 30க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஆனால் சந்தேகத்தின் பெயரிலேயே பலரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிசிடிவியில் பதிவான வீடியோ காட்சிகள் கிடைத்தும் குற்றவாளியின் உருவம் வெளி வந்த போதிலும் முபை போலீஸ் தடுமாறி வருகிறது. இதனால் மஹாராஷ்டிராவில் ஆளும் கட்சி மீது சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சைஃப் அலி கானுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், அவர் நன்றாக குணமடைந்து வருவதாகக் கூறினர். இருப்பினும், கத்திக் குத்து தாக்குதல் எந்த நிரந்தர சேதத்தையும் ஏற்படுத்தாததால் சைஃப் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று அவர்கள் கூறினர்.
லீலாவதி மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் நிராஜ் உத்தமானி, சைஃப் அலி கானை உண்மையான ஹீரோ. மிகவும் அதிர்ஷ்டசாலி என்று அவர் கூறினார். ஏனெனில் கத்தி அவரது முதுகில் 2 மிமீ ஆழத்தில் சென்றிருந்தால் அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டிருக்கலாம்.
“அவர் மருத்துவமனைக்கு வந்தபோது இரத்தத்தில் நனைந்திருந்தார். ஆனால் அவர் சிங்கம் போல உள்ளே நடந்து வந்தார். அவர் ஒரு உண்மையான ஹீரோ… அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி. கத்தி 2 மிமீ ஆழத்தில் இருந்திருந்தால், அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டிருக்கும்,” என்று அவர் கூறினார்.