கடந்த 2012 ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் ‘ஏக் தா டைகர்’ படம் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சல்மான் கான் டைகர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெரிய அளவில் பேசப்பட்ட டைகர் எனும் பெயரை வைத்து 2017ல் ‘டைகர் ஜிந்தா ஹை’ என்ற படமும் வெளியானது. தற்போது இதன் மூன்றாம் பாகமாக டைகர் 3 திரைப்படம் மணிஷ் ஷர்மா இயக்கத்தில் உருவாகி வருகிறது.இந்த படத்தை யாஷ் ராஜ் ஃபில்ம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சல்மான் கான் உடன் இணைந்து முதல் பாகத்தில் நடித்த கத்ரீனா கைஃப் நடிக்கிறார்.
இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி உலகம் முழுவதும் வெளியானது. இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் டைகர் படம் பார்க்கச் சென்ற ரசிகர்கள், திரையரங்கில் பட்டாசுகளை வெடிக்க வைத்தனர். இதனால், திரையரங்கில் இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பதிவிட்டுள்ள நடிகர் சல்மான்கான், டைகர் 3 படத்தின்போது திரையரங்கில் பட்டாசு வெடித்தது தொடர்பாக கேள்விப்பட்டேன் என்றும், இது ஆபத்தானது என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், நமக்கும், மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படாத வகையில் படத்தை ரசியுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.