சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கில் சரத்குமார் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தியாவின் மலிவு விலை வானூர்தி சேவையை தொடங்க நினைத்து அதில் வெற்றியும் பெற்ற திரு.கோபிநாத் அவர்களின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவானது தான் இப்படம். இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்திருந்தார். சுதா கொங்காரா இயக்கியிருந்த இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். 2D என்டர்டைன்மென்ட் சார்பில் நடிகர் சூர்யாவே இப்படத்தை தயாரித்திருந்தார். படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை, படத்தின் மாபெரும் வெற்றிக்கு மூலதனம் ஆகியது. இந்நிலையில் இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் அக்ஷய்குமார் நடிக்கிறார். சுதா கொங்காரா தான் இப்படத்தையும் இயக்குகிறார் என அப்போதே அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கி நடைபெற்று வந்தது.

பின்னர் இயக்குனர் சுதா கொங்காராவிற்கு ஏற்பட்ட சிறு விபத்தின் காரணமாக படப்பிடிப்பு சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இப்படத்தில் அபர்ணா பாலமுரளி கதாபாத்திரத்தில் ராதா மதன் நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில் அக்ஷய் குமாருடன் இணைந்து நடிகர் சூர்யாவும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
கூடுதல் செய்தியாக படத்தில் நடிகர் சரத்குமார் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரும்பாலும் இவருடைய கதாபாத்திரம் சூரரைப்போற்று படத்தில் நடித்த மோகன் பாபுவின் கதாபாத்திரமாக இருக்கலாம் என்றும் செய்திகள் பரவி வருகின்றன.
குறிப்பாக இந்த படத்திற்கு “ஸ்டார்ட் அப்” என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
நடிகர் அக்ஷய் குமார் ஏற்கனவே பல தமிழ் படங்களை ரீமேக் செய்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.