இயக்குநர் அமீரிடம் ஞானவேல் ராஜா மன்னிப்பு கோரி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு விளக்கம் கோரி சசிகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் பருத்திவீரன். படம் வெளியான நாள் முதலே படத்தின் இயக்குனரான அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் இடையில் சலசலப்பு ஏற்பட்டது. முன்னதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீர் பொய் கணக்குகள் காட்டி பணத்தை மோசடி செய்து விட்டார் எனவும் அவருக்கு படம் எடுக்க தெரியாது என்றும் தொடர்ந்து பேசி வந்தார். ஆரம்பத்தில் இருந்தே இதனை அமீரும் மறுத்து அவ்வப்போது பதில் அளித்து வந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டி ஒன்றில் அமீரை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து அவமானப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். இதனால் இயக்குனர் அமீர் மிகவும் மனமடைந்து உண்மை தெரிந்தவர்களும் அமைதியாக உள்ளீர்களே என்று தன் வேதனையை வெளிப்படுத்தினார். இதனால் படத்தில் பணிபுரிந்த உண்மை அறிந்த பிரபலங்கள் அமீர் மீது எந்த தவறும் இல்லை என்றும் ஞானவேல் ராஜா தான் தேவை இன்றி பொய் குற்றச்சாட்டை முன் வைக்கிறார் என்றும் அமீருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். பிரபலங்களான சமுத்திரக்கனி, சசிகுமார் போன்றோரும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இயக்குநரும், நடிகருமான கரு. பழனியப்பன் அமீருக்கு ஆதராக அறிக்கை வெளியிட்டார். பொதுவெளியில் அமீரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். தொடர்ந்து மேலும், பலர் அமீருக்கு ஆதரவாக பேசினர். ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அமீருடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றையும் வௌியிட்டுள்ளார். அதில், நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் இயக்குநர் அமீரின் மனதை புண்படுத்தி இருந்தால், அதற்கு தான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த அறிக்கைக்கு விளக்கம் கோரி சசிகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். அமீர் அண்ணன் ஞானவேல் மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டு என்ன? தான் பயன்படுத்திய சில வார்த்தைகள் என ஞானவேல் குறிப்பிட்டது என்ன வார்த்தைகள் என்று கேள்வி கேட்டுள்ளார். மேலும், திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்தி விட்டு, அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? எனவும் சசிகுமார் கேட்டுள்ளார்.