நகைச்சுவை நடிகர்களான சந்தானம், யோகி பாபு, சூரி ஆகியோரை தொடர்ந்து நடிகர் சதீஷும் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நாய் சேகர் படத்தில் சதீஷ் ஹீரோவாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து கான்ஜுரிங் கண்ணப்பன் எனும் திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார் சதீஷ். இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதற்கிடையில் நடிகர் சதீஷ், வெங்கி இயக்கத்தில் வித்தைக்காரன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஒயிட் கார்பெட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வி.பி.ஆர் இதற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் சதிஷுடன் இணைந்து சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இப்படம் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் வெங்கி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், “சதீஷ் இந்த படத்தில் மேஜிக் மேனாக நடித்துள்ளார். காமெடி கதைகளில் நடித்த சதீஷ் வித்தைக்காரன் படத்தில் சீரியஸான கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் சதீஷ் இதில் முதன் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களுக்கு திரில்லர் அனுபவத்தை கொடுக்கும். படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து பிப்ரவரி 16ஆம் தேதி படத்தை வெளியிட இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு படத்தின் டீசர் வெளியான நிலையில் அதை தொடர்ந்து முதல் பாடலும் வெளியாகி கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.


