SK 25 திரைப்படம் அமரன் படத்தை போல் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவரது நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அதேசமயம் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு SK 25 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படமானது கடந்த 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி வருவதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது. அதன்படி இந்த படத்திற்கு 1965 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்க, இவர்களுடன் இணைந்து அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது SK 25 படத்தின் படப்பிடிப்பு சென்னையில், செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ- இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அதன்படி சிவகார்த்திகேயன் சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் அமரன் படத்தின் கிளைமாக்ஸ் போலவே இருக்கும் என்றும் புதிய தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த தகவல் SK 25 படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேன்மேலும் அதிகமாக்கியுள்ளது.