தனுஷ் பட நடிகைக்கு விரைவில் திருமணம்
- Advertisement -
தமிழிலும், மலையாளத்திலும் இளம் நடிகையாக வலம் வரும் ரஜிஷா விஜயனுக்கு விரைவில் திருமணம் நடைபற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரஜிஷா விஜயன். மாறுபட்ட கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளியான ஜூன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் மூலம் அவர் தமிழுக்கு அறிமுகம் ஆனார். இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ரஜிஷா நடித்திருப்பார்.

இத்திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரஜிஷா, அடுத்து சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் ஆசிரியையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். இதைத் தொடர்ந்து சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்த சர்தார் படத்திலும் ரஜிஷா நடித்திருந்தார். கார்த்திக்கு மனைவியாக அவர் நடித்திருந்தார். தொடர்ந்து மலையாளத்தில் கீடம் என்ற படத்தில் அவர் நடித்தார். இப்படத்தில் துணிச்சலான வேடத்தில் நடித்ததற்காக ரஜிஷாவுக்கு பாராட்டு குவிந்தன. தற்போது துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரஜிஷா விஜயன், மலையாள திரையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் டோபின் தாமஸை காதலித்து வருகிறார். இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், ரஜிஷாவின் காதலர் டோபின், ஆயிரத்து 400 நாட்களை கடந்த நிலையில், புதிய சுற்றுக்காக காத்திருக்கிறோம் என பதிவிட்டிருக்கிறார். இதையடுத்து, இருவரின் திருமணம் விரைவில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.