Homeசெய்திகள்சினிமாஎவர்கிரீன் ஹீரோயின் ஸ்ரீதேவியின் பிறந்த தின சிறப்பு பதிவு!

எவர்கிரீன் ஹீரோயின் ஸ்ரீதேவியின் பிறந்த தின சிறப்பு பதிவு!

-

நடிகை ஸ்ரீதேவியின் 60வது பிறந்த தினம் இன்று.

அந்தக் காலம் முதல் இந்த காலம் வரை ரசிகர்கள் அனைவராலும் நினைவு கூறப்படும் ஒரே நடிகை ஸ்ரீதேவி தான். எவர் கிரீன் கனவு கன்னியாக திகழ்ந்தவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரை உலகில் பெண் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்தவர்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகர்கள் மட்டுமே பல காலங்கள் சினிமாவில் நிலைத்து நிற்கின்றனர். ஆனால் நடிகைகளோ அப்படி இல்லை. திருமணம் முடிந்த பிறகு படங்களை விட்டு விலகுகின்றனர். ஆனால் நடிகை ஸ்ரீதேவி தனது அசாத்தியமான நடிப்பினாலும் நளினமான நடனத்தினாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். திரை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.

1969 ஆம் ஆண்டில் வெளிவந்த துணைவன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தனது நாலு வயதிலேயே முருகன் வேடத்தில் நடித்து பலரின் பாராட்டுகளை வென்றார். அதைத்தொடர்ந்து எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்டோரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். 1976 இல் கே பாலச்சந்தரின் மூன்று முடிச்சு திரைப்படத்தில் கதாநாயகியாக அடி எடுத்து வைத்தார்.

பின் பாரதிராஜாவின் 16 வயதினிலே திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மயிலு என்ற இவரின் கதாபாத்திரம் இன்றுவரையிலும் பேசப்படுகிறது. 16 வயதினிலே திரைப்படம் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களும் கொண்டாடும் விதமாக அமைந்தது.
இந்த 16 வயதினிலே திரைப்படம் இவருக்கு மட்டுமல்லாமல் கமல் ரஜினிக்கும் முக்கியமான படமாக அமைந்தது. மயிலு, பரட்டை, சப்பானி இந்த 3 கதாபாத்திரங்களும் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.

கமலுடன் இணைந்து நடித்த மூன்றாம் பிறை திரைப்படத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி திரை உலகின் மகாராணியாக உருவெடுத்தார். இதற்கிடையில் வாழ்வே மாயம், ராணுவ வீரன், மீண்டும் கோகிலா, அடுத்த வாரிசு, தனிக்காட்டு ராஜா, போக்கிரி ராஜா, வறுமையின் நிறம் சிவப்பு, குரு, சங்கர்லால் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையானார்.

தமிழில் இருந்து தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்தினார். அங்கும் தன் நடிப்புத் திறமையால் பலரையும் அசர வைத்து தனது வெற்றிக் கொடியை ஏற்றினார். பாலிவுட் ரசிகர்கள் இவரை சூப்பர் ஸ்டார் ஆக கொண்டாட ஆரம்பித்தனர்.

பத்மஸ்ரீ விருது, தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றார். கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்த இவர் 2000 ஆம் ஆண்டு நடிப்பிலிருந்து விலக்குவதாக கூறினார். அதன் பிறகு 2012 இல் இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்தின் மூலம் மீண்டும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்.

கடைசியாக இவர் நடித்த திரைப்படம் மாம். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். ஆனால் அந்த விருதை பெறுவதற்கு முன்னரே அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். மண்ணை விட்டு மறைந்தாலும் சினிமா உயிருடன் இருக்கும் வரை ரசிகர்களின் மனதில் ஒரு சிறந்த நடிகையாக ஸ்ரீதேவி என்றும் நிலைத்து நிற்பார். ஸ்ரீதேவியின் 60வது பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்ந்து பெருமைப்படுவோம்.மேலும் ஸ்ரீதேவியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் புகைப்படத்தை சிறப்பு சித்திரமாக வடிவமைத்து கூகுள் நிறுவனம் கௌரவப்படுத்தியுள்ளது.

MUST READ