சரத்குமார், சூர்யவம்சம் 2 படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 1997 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் சூர்யவம்சம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சரத்குமார், ராதிகா, தேவயானி, மணிவண்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் சரத்குமார் தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
இப்படத்தில் மகனாக நடித்திருந்த சரத்குமார் தனக்கு படிப்பறிவு இல்லாத காரணத்தினால் தன்னை வேண்டாம் என்று ஒதுக்கிய காதலிக்கு முன்னால் தன் கடின உழைப்பினால் மிகப்பெரிய அளவில் வளர்ந்து காட்டுவார். தனது மனைவியான தேவயானி யையும் கலெக்டர் ஆக்கிவிடுவார். மேலும் தன் தந்தை எவ்வளவு தான் வெறுத்தாலும் அவர் மீதான அன்பும் மரியாதையும் குறையாத மகனாக நடித்திருப்பார்.

தந்தையாக நடித்திருந்த சரத்குமார், தன் மகன் பொறுப்பில்லாமல் இருப்பதால் அவரை வெறுத்தாலும், தன் மகனின் வாரிசான பேரன் மீது மிகுந்த அன்பு உடையவராக நடித்திருப்பார்.
இவ்வாறாக ஒரு சிறந்த குடும்ப படமாக விளங்கும் இந்த படம் இன்றளவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. எஸ் ஏ ராஜ்குமார் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.
அதுமட்டுமில்லாமல் இன்றைய தலைமுறையினர்களும் இப்படத்தை விரும்புவார்கள்.
இந்நிலையில் இந்த படம் வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதுகுறித்து நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், கலைத்துறை பயணத்தில் காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய சிறப்பு வாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள்.
கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ரசித்து, மாபெரும் வெற்றி அளித்து ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றி. விரைவில் சூரியவம்சம் 2″ என்று பதிவிட்டுள்ளார்.