நம் வாழ்க்கையை செதுக்கியதில் முக்கியக் பங்கு யாருக்கு அதிகம் என்று கேட்டால் நம்முடைய ஆசிரியர்களையே சொல்ல முடியும். குழந்தைப் பருவத்தில் நம் பெற்றோர்களுடன் செலவழித்த நேரத்தைவிட ஆசிரியர்களுடன் செலவிட்ட நேரமே அதிகமிருக்கும். எனவே அவர்கள் தான் நம்மை செதுக்கிய சிற்பிகள்.
செப்டம்பர் 5-ம் தேதி ஒவ்வொரு வருடமும் இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. படகுகளுக்கும் தோனிகளுக்கும் கப்பல்களுக்கும் இவ்வாறாக கரை தேடி வரும் அனைவருக்கும் வழி காட்டும் கலங்கரை விளக்கம் அதே இடத்தில தான் எப்போதும் இருக்கிறது. அது போல தான் நம் வாழ்வில் கரையேற கைகாட்டும் ஆசிரியர்கள் எப்போதும் இப்போதும் அதே இடத்தில் தான் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டாடத் தான் இந்த தினம்.
சினிமாவிலும் ஏராளாமான ஆசிரியர்கள் கதாபாத்திரங்கள் இடம் பெற்று நமக்கு அவர்களின் உன்னதத்தை உரக்கச் சொல்லியிருக்கின்றன.
அப்படியான தமிழ் சினிமாவில் இடம் பெற்ற ஆசிரியர்கள் கதாபாத்திரங்களை பற்றி ஒரு அலசல்
சாட்டை (சமுத்திரக்கனி)
தமிழ் சினிமாவின் சிறந்த ஆசிரியர் என்று வந்துவிட்டால் முதல் விருது எப்போதும் நம் சாட்டை தயாளன் சாருக்கு தான். ஏணியை கூரைக்கு போடாதே வானத்துக்கு போடு என்று பேசிய ஒவ்வொரு வசனத்திலும் அருமையான கருத்துக்களை அள்ளித் தெளித்து மாணவர்கள் மத்தியில் இன்றளவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது சாட்டை திரைப்படம். மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை எடை போடுபவர்களுக்கு மத்தியில் ஒவ்வொருவரின் தனித்திறமையை காணுங்கள் என்று சொல்லியது இந்தப் படம். இந்த அருமையான தினத்தில் சமுத்திரக்கனி வாழ்ந்த தயாளன் சாருக்கு வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்!
வாகை சூடவா (விமல்)
1960-களில் கல்வியின் வாசமே வீசாத செங்கல் அறுத்து வயிற்றை கழுவி வரும் ஒரு கடைக் கோடி கிராமத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார் கதாநாயகன். இந்தப் படம் நம் அனைவர்க்கும் நிச்சயம் பிடித்த படமாக இருக்கும். முதலாளிகள் படிப்பறிவு இல்லாத மக்களை எப்படி பரம்பரை பரம்பரையாக ஏமாற்றி வருகிறார்கள் என்பதைக் காட்டி அதிலிருந்து படிப்பின் மூலம் எப்படி முன்னேறலாம் என்பதையும் அருமையாக காட்டியிருந்தார். விருப்பமே இல்லாமல் வந்து எல்லாருக்கும் விருப்பமானவராக விமல் மாறும் கதைக்களம் அருமையாக அமைந்திருந்தது. படத்தின் இறுதியில் அந்த பிள்ளைகள் தங்களுக்கான கூலியை கணக்கு பார்த்து சரியாக வாங்கும் போது நம் மனதிலும் ஒரு நிறைவு ஏற்படும். அதுவே படத்தின் பெரும் வெற்றி.
வாத்தி (தனுஷ்)
சமூகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கும் கல்வி சென்று சேர வேண்டும், கல்விதான் நம் கையில் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம், எத்தனை தடைகள் வந்தாலும் யார் எதிர்த்தாலும் நம் கல்வி கற்றால் தான் வாழ்க்கையே முழுமை அடையும் என்பதை அதிரடியாக காண்பித்து இருந்தார் வாத்தி தனுஷ். கற்பிப்பதையே தன் உயர்ந்த லட்சியமாகக் கொண்டு ஒரு ஆசிரியரால் சமூகத்தில் எந்தவித மாற்றத்தையும் கொண்டுவர முடியும் என்பதையும் ஆணித்தனமாக எடுத்துச் சொல்லி இருந்தார் வாத்தி.
ராட்சசி (ஜோதிகா)
இந்தப் படத்தில் ஜோதிகா கீதா ராணி என்ற கடுமையான தலைமை ஆசிரியையாக நடித்திருந்தார். மோசமாக இயங்கும் பள்ளிக்கு பொறுப்பேற்கும் இளம் தலைமை ஆசிரியையான கீதா ராணி தான் கற்றுக்கொண்ட ராணுவ உத்திகளை எப்படி பள்ளியில் அமல்படுத்தில் மாணாக்கர்களை நல்வழிப்படுத்தினார் என்பது தான் கதை. மற்ற பள்ளி கதைக்களம் கொண்ட படங்களைப் போலவே இந்தப் படமும் அமைந்திருந்தது. ஜோதிகா கர்வம் மற்றும் கம்பீரமான நடிப்பின் மூலம் மிளிர்ந்தார்.
பட்டாளம் (நதியா)
பள்ளி சிறுவர் சிறுமியர்கள், நட்பு, விரோதம், தேர்வு பயம், மன அழுத்தம் என எல்லா பிரச்சினைகளையும் நடக்கின்ற நிலையில் இருந்தாலும் அவற்றை ஒரு ஆசிரியரால் எளிதில் கடக்கச் செய்ய இயலும் என்பதை ஜாலியாக எடுத்துக்காட்டினார் பட்டாளம் படத்தில் ஆசிரியையாக வந்த நதியா. வாழ்வில் பல முக்கிய நிகழ்வுகளை சந்திக்கும் பருவமான பதின் பரும பிரச்சனைகளையும் அதை கையாளும் விதத்தையும் ஜாலியாக சொன்ன ஆசிரியை நதியா போல ஒருவரை நிச்சயம் நம் பள்ளி பருவத்திலும் பார்த்திருப்போம்.
மாஸ்டர் (விஜய்)
மாஸ்டர் படத்தில் ஜே டி யாக தளபதி விஜய் ஒரு குடிகார பேராசிரியர் போன்ற தோற்றத்தில் அறிமுகம் ஆகி பின்னர் போதைப் பழக்கத்தில் இருந்து சிறுவர்களை மீட்கும் நல்லாசானாக மனதில் இடம் பிடித்தார்.
நம்மவர் (கமல்ஹாசன்)
1994-ம் ஆண்டு வெளியான நம்மவர் படத்தில் கமல்ஹாசன் பேராசிரியர் செல்வம், கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தனது செல்வாக்குமிக்க நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, வளாகச் சுவர்களை ஓவியம் தீட்டுதல், கலாச்சார மையத்தைத் திறப்பது என அப்போதே கல்வியில் வரவேற்கத்தக்க பல மாற்றங்களை அந்தப் படத்தில் செய்தார் நம்மவர். சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான் என்ற பாட்டை வைத்து சுத்தத்தின் மதிப்பையும் சுத்தமாக விளக்கினார். மாஸ்டர் விஜயின் ஆசான் நம்ம பேராசிரியர் செல்வம் என்பது கூடுதல் தகவல்!
பசங்க 2 (அமலாபால்)
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த பசங்க 2 படமும் ஆசிரியர்களின் பெருமையை எடுத்துரைக்கும் மிக முக்கியமான படமாக அமைந்திருந்தது. சுட்டிக் குழந்தைகளை கெட்டிக்காரத்தனமாக வளர்க்கும் முறையை, ஆசிரியர் – மாணவ பிணைப்பை உயிரோட்டத்துடன் புரிய வைத்திருப்பார் ஆசிரியராக நடித்த அமலாபால்.
பேராண்மை ( ஜெயம் ரவி)
ஒரு கல்வி அறிவில்லாத பழங்குடியின சமூகத்தில் இருந்து கல்வியால் உயர்நிலை அடைந்து NCC ஆசிரியராக உயர்ந்து, பல இன்னல்களை சந்தித்தும், தன்னை உதாசீனப்படுத்திய ஐந்து பெண்களை வைத்துக்கொண்டு நாடே பெருமைப்படும் படி எதிரி நாட்டின் திட்டத்தை முறியடித்து இருப்பார் துருவனாக வாழ்ந்த ஜெயம் ரவி. தலைகனம் இல்லாத ஆசிரியர் தன் மாணவர்களின் முன் எந்த அளவுக்கு இறங்கியும் அவர்களை நல்வழிப்படுத்த முடியும் என்பதை அழகாக கண்முன்னே நிறுத்தி இருந்தார் ஆசிரியர் துருவன்.இவ்வாறாக தமிழ் சினிமாவில் மதிப்பெண்களை விட மதிப்பான எண்ணங்களை மாணவர்களை உயர்த்தும் என்பதை பல நடிகர்கள் ஆசிரியர்களாக நடித்து எடுத்துக் கூறியுள்ளனர். நாம் மேலும் மேலும் உயரத்திற்கு செல்ல உந்துவிசையாக, ஊக்க சக்தியாக, ஏணியாக, உளியாக தம்மை வருத்திக்கொண்டு நம்மை செதுக்கும் ஆசிரியர் பெருந்தகைகளுக்கு தலை வணங்குவோம்.