Homeசெய்திகள்சினிமாமுத்தமிழ் அறிஞரின் நூற்றாண்டு விழா… மறைந்த கலைஞர் அவர்களின் மறையாத திரை வரலாறு!

முத்தமிழ் அறிஞரின் நூற்றாண்டு விழா… மறைந்த கலைஞர் அவர்களின் மறையாத திரை வரலாறு!

-

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் இன்று. இந்நாளை தமிழகமெங்கும் நூற்றாண்டு விழாவாக தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது.

கலைஞர் கருணாநிதி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அரசியல் சாணக்கியன், அதனால் தான் அவரால் ஐந்து முறை அரியணை ஏற முடிந்தது.

தமிழக மக்களின் மனதைக் கவர சிறந்த வழி சினிமா. திரையின் மூலம் மக்கள் நெஞ்சில் குடியேறி அரியணை ஏறியவர்கள் பலர். அப்படி திரைத்துறை மூலம் மக்களை கவர்ந்த எம்ஜிஆர், கருணாநிதி இருவருமே தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்து அரியணை ஏறினார்கள்.

தமிழக அரசியலில் கலைஞர் கருணாநிதியின் பங்கு அளப்பரியது என்பது அனைவர்க்கும் தெரியம். அதேபோல, கலைஞர் திரைத்துறையிலும் ஈடற்ற பங்கு வகித்துள்ளார்.

தனது 17 வயதிலலே கையில் பேனா எடுத்தவர் மறையும் வரை அதை கீழே வைக்கவில்லை. இளம் வயதிலே திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுத தொடங்கினார். கலைஞரின் பேனா வழி உதிர்ந்த எழுத்துக்கள் யாவும் தமிழக மக்கள் நெஞ்சில் பச்சை குத்தியது போல நீங்கா இடம் பிடித்தன.

திரைத்துறையில் தயாரிப்பாளராகவும், வசன கர்த்தாவாகவும், பாடலாசிரியராகவும், கதை ஆசிரியராகவும் திகழ்ந்தவர் கலைஞர். இவர் ஏராளமான திரைப்படங்களில் பகுத்தறிவு, அரசியல், பெண்ணுரிமை, இலக்கியம், சமூக முன்னேற்றம் போன்றவர்களைப் பற்றி எடுத்துரைக்கும் வசனங்களை எழுதியுள்ளார்.

இவர் 1947-ல் ‘ராஜகுமாரி’ என்ற படத்தில் தொடங்கி பராசக்தி, மலைக் கள்ளன், ராஜா ராணி, நெஞ்சுக்கு நீதி, பாசப்பறவைகள், பெண் சிங்கம், இளைஞன், பாசக்கிளிகள், பொன்னர் சங்கர் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். மேலும் இவர் தெலுங்கு மற்றும் சமஸ்கிருத மொழிகளிலும் வசனங்கள் எழுதியுள்ளார். கலைஞரின் திரைக்கதை வசனத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 9 படங்களிலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 8 படங்களிலும் நடித்துள்ளார்கள்.

சிவாஜிக்காக பராசக்தி படத்தில் கலைஞர் எழுதிய அனல் பறக்கும் வசனங்கள் இன்றளவும் மக்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது.

திரைக்கதை வசனம் மட்டுமல்லாமல் பல்வேறு படங்களுக்கு பாடல்களையும் எழுதியுள்ளார். அந்த வகையில் பராசக்தி, குறவஞ்சி, பூமாலை, காஞ்சித்தலைவன், ராஜா ராணி உள்ளிட்ட படங்களுக்கு பாடல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதும் பாடல்களில் தமிழுணர்ச்சி கலந்திருப்பதை காண முடியும்.

கலைஞர் கருணாநிதி அவர்கள் தன் வாழ்நாள் முழுவதிலும் அரசியலில் மட்டுமல்லாமல் கலை துறையிலும் ஆர்வம் காட்டி ‘கலைஞர்’ என்ற பெயருக்கு மறு உருவமாக அல்ல ஒரே உருவமாக வாழ்ந்தவர்.

இவ்வாறு அரசியல் வரலாறு மற்றும் திரை வரலாறு கண்ட முத்தமிழ் அறிஞர் அவர்களின் 100-வது பிறந்தநாளில் அவரின் அரசியல் வாழ்வை மட்டுமல்லாமல் திரை ஆளுமையையும் நினைவு கொள்வோம்!!

MUST READ