நடிகர் ரஜினி, டிஜே ஞானவேல் இயக்கத்தில் தனது 170 ஆவது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு வேட்டையன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் படமானது 2024 அக்டோபர் மாதத்தில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினி, கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரஜினியின் 171 வது படமான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலாநிதிமாறன் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்து வருகிறார். படமானது ஆக்சன் நிறைந்த கதைக்களத்தில் உருவாகிறது. படத்தில் ரஜினி நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்டில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், சௌபின் சாஹிர் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் கூலி படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினி தனது ரசிகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.