Homeசெய்திகள்சினிமாபிரபலங்கள் வீட்டில் ஏற்படும் இழப்பில் ஊடகங்களின் இழிவான செயல்... கோரிக்கை வைத்த தென்னிந்திய நடிகர் சங்கம்!

பிரபலங்கள் வீட்டில் ஏற்படும் இழப்பில் ஊடகங்களின் இழிவான செயல்… கோரிக்கை வைத்த தென்னிந்திய நடிகர் சங்கம்!

-

ஊடகங்கள் என்பது மக்கள் இருந்த இடத்திலிருந்தே நாட்டில் நடக்கும் செய்திகளை விரைவில் அறிந்து கொள்வதற்காகவே. அதே சமயம் கலைஞர்களின் படைப்புகளை தாண்டி அவர்களின் குடும்பத்தில் நடக்கின்றவைகளை மக்களுக்கு கொண்டு செல்வதில் தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்கள் பெரும் பங்களிக்கின்றன. ஆனால் சமீபத்தில் எதிர்பாராத விதமாக மறைந்த மாரிமுத்து மற்றும் விஜய் ஆண்டனியின் மகள் மறைவில் ஊடகங்களின் கீழ்த்தனமான செயல்பாடுகள் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. எந்த பிரபலங்கள் மறைந்தாலும் அவர்கள் எதனால் மறைந்தார்கள் என்பதன் உண்மையை அறியாமல் ஊடக வாசிகள் தங்களின் இஷ்டத்திற்கு ஏற்ப தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். குறிப்பாக விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அந்த மாணவியின் முகத்தைக் கூட மறைக்காமல் புகைப்படங்களை வெளியிட்டு பல வதந்திகளை பரப்பினர். சமீபத்தில் கூட இதற்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமை கண்காணிப்பு ஆணையம் கண்டனம் தெரிவித்திருந்தது. ஆனாலும் ஊடக வாசிகள் தொடர்ந்து கன்டென்ட்டிற்காக தவறான செய்திகளை பரப்பிக் கொண்டே உள்ளனர். ஊடகத்துறையினரின் இவ்வகையான செயல்பாடுகள் பிரபலங்களின் வீட்டில் நடந்த சோகத்தை விட பெரும் சோகத்தை அவர்களுக்கு கொடுக்கிறது. இழப்பு ஏற்பட்ட குடும்பங்களின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் ஊடகங்கள் செய்யும் இழிவான செயல்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக கோரிக்கை ஒன்றை
முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில்,

“அன்புடையீர் ! திரையுலகில், நடிகர்களின் படைப்புகளும் செயல்பாடுகளும் பொது மக்களின் பாராட்டுகளிலும் , கவனிப்புகளிலுமே புகழடைகிறது . அதற்கு பெரும் ஊடகத்துறையும், ஊடகவியலார்களும்தான்.. ! அக்கலைஞர்களை, படைப்புகளைத் தாண்டி அவர்களது குடும்பம் மற்றும் திறமைகள் , குணாதிசயங்கள், சமூக பங்களிப்புகள் போன்றவற்றை மக்களுக்கு கொண்டு செல்வதில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி , இணைய ஊடகங்களின் பங்களிப்பு பெரும் பங்காற்றுகிறது.

ஆனால் சமீபத்தில் எதிர்பாராமல் மறைந்த திரு.விஜய்ஆண்டனி அவர்களின் மகள் இழப்பின் போது ஊடகத்துறை நண்பர்கள் நடந்து கொண்டது பலரையும் முகம் சுழிக்கவைத்துள்ளது: இறுதி நிகழ்வில் நடந்த ஊடகத்துறையினரின் செயல்பாடுகள் எல்லை மீறி பலரையும் சங்கடத்திலும், விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறோம்.. !

துயரம் தரும் செய்திகள் சம்பந்தப்பட்டோரை சேரும் முன்பே, தவறான தகவலால் பரபரப்பாக்குவதும், அதிர்ச்சியால் உடைந்து துயரத்தில் நிற்கும் குடும்பத்தை ஊடக நெருக்கடிக்கு உள்ளாக்குவதும் எந்தவிதத்தில் நியாயப்படுத்துவது? துயரத்தால் தாக்குண்டோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல வரும் கலைஞர்களையும், ஊடக பரபரப்பிற்கு உள்ளாக்குவது எந்தவிதத்தில் சரியானது?

எதிர்பாராத இழப்பினால் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் குடும்பத்தினரும் , துக்கம் விசாரிக்க வந்த உறவினர்களும் அவர்களுக்கு உதவ வந்த கலைத்துறை நண்பர்களும , ஊடக நெருக்கடியில் சிக்கி, இறுதி நிகழ்வுகளைக்கூட முழுமையாக செய்யவிடாமல் தடுப்பது எந்த விதத்தில் சரியானது.. ? கலைஞர்களின் இறுதி நிகழ்வை மக்களுக்கு கொண்டு சென்று நிரந்தர புகழ் சேர்க்கவேண்டும் என்ற ஊடக நண்பர்களின் செயல்பாட்டின் எல்லைகள் எதுவரை? எதிர் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க ஊடக செயல்பாட்டின் எல்லைகளை தீர்மானிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் … ! சுயக்கட்டுப்பாட்டை எங்கள் கலைஞர்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பொறுப்புணர்ந்து உங்களுக்குள் தீவிரமான ஊடகத் தோழர்கள் கொண்டு வர வேண்டும். அரசும் இதை கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்பதே எம் வேண்டுதல்”  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ