சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களைத் திருடிய வழக்கில், காவலர் வேல்முருகன் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட காவலர், தற்போது முதலமைச்சர் விஜயின் நீலாங்கரை இல்லப் பாதுகாப்புப் பணிப் பிரிவில் பணியாற்றி வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தம் கேட்டு வெளியே வந்த காவலர்கள்
துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் தொடர்பாகப் பறிமுதல் செய்யப்பட்ட பல இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிலர் லோடு வாகனத்தில் அந்த இருசக்கர வாகனங்களை ஏற்றிச் சென்றுள்ளனர்.
வாகனங்களை ஏற்றும்போது எழுந்த சத்தத்தைக் கேட்டு காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது, காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை மூன்று பேர் லோடு வாகனத்தில் ஏற்றித் திருடிச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
காவலரே திருட்டுக்குத் திட்டமிட்டதாக விசாரணையில் தகவல்
பிடிபட்ட மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தச் சம்பவத்தில் வேல்முருகன் முக்கியப் பங்காற்றியதாகத் தெரியவந்தது. அவருடன் துரைப்பாக்கம் பகுதியில் காயலான் கடை நடத்தி வரும் முத்துப்பாண்டி (25), அந்தக் கடையில் பணியாற்றும் ஜாகிர் உசேன் (20) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
காவலர் வேல்முருகன் முன்பு துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணியாற்றியுள்ளார். பின்னர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அடையாறு காவல் நிலையப் பணியமைப்பின் கீழ் பணியாற்றி வந்ததாகவும், தற்போது நீலாங்கரையில் உள்ள முதலமைச்சர் விஜயின் இல்லப் பாதுகாப்புப் பணிப் பிரிவில் பணியில் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலும் திருட்டு?
போலீசாரின் தொடர் விசாரணையில், வேல்முருகன் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காலத்தில், முத்துப்பாண்டி மற்றும் ஜாகிர் உசேன் ஆகியோருடன் இணைந்து ஏற்கெனவே இருசக்கர வாகனங்களைத் திருடியதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆறு இருசக்கர வாகனங்களையும், செப்டம்பர் மாதத்தில் மேலும் ஆறு வாகனங்களையும் திருடிச் சென்றதாக விசாரணையில் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, மீண்டும் காவல் நிலையத்துக்கு வந்த மூவரும் வாகனங்களை லோடு வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது பிடிபட்டுள்ளனர்.
இந்தத் திருட்டுச் சம்பவங்களில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதையும், இதேபோன்ற குற்றங்கள் வேறு காவல் நிலையங்களிலும் நடைபெற்றுள்ளனவா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுப்பேட்டையில் விற்பனை; பணப் பரிவர்த்தனையும் ஆய்வு
திருடப்பட்ட இருசக்கர வாகனங்களைச் சென்னை புதுப்பேட்டைக்குக் கொண்டு சென்று, தங்களுக்குத் தெரிந்த நபர்களிடம் விற்பனை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. வாகன விற்பனையின் மூலம் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை வேல்முருகனுக்கு முத்துப்பாண்டி அனுப்பியதாகவும் போலீசார் கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.16,000 மற்றும் செப்டம்பர் மாதத்தில் ரூ.18,000 என முத்துப்பாண்டி, வேல்முருகனுக்கு ஜி-பே மூலம் பணம் அனுப்பிய பரிவர்த்தனைகளும் விசாரணையில் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேல்முருகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், பணம் தேவைப்பட்டபோது வாகனங்களைத் திருடி விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவலர் வேல்முருகன் பணியிடை நீக்கம்
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வாகனத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் வேல்முருகனைப் பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்க வேண்டிய பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களே திருடப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்முருகன் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட இருவரின் தொடர்புகள், திருடப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை, விற்பனை செய்யப்பட்ட இடங்கள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
மெட்ரோ பணிகள் நிறைவு பெறும் நிலையில் சீரமைக்கப்படாத சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி!
