உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பகத் பாஸில் கீர்த்தி சுரேஷ் வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘சூர்யா நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் தயாரித்தது. அப்போது எனக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லை.
ஏழாம் அறிவு திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் பேசும் வசனம் ஒன்று இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இடம் பெற்று இருந்தது. அந்த சமயத்தில் எனக்கு இருந்த அரசியல் புரிதலினால் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இயக்குனர் ஏ ஆர் முருகதாஸும் அவருடைய அரசியல் புரிதலுக்கு ஏற்ப அந்த வசனங்களை வைத்திருந்தார்.நான் அதை குறை கூறவில்லை. சூர்யா அந்த காட்சியில் இல்லை. டப்பிங் செய்த போதும் சூர்யா இல்லை. ஆனால் படம் பார்த்துவிட்டு சூர்யா என்னை தொடர்பு கொண்டு படத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வசனம் ஒன்று உள்ளது அதை நீக்கி விடுங்கள் என்று கூறினார். ஆனால் எனக்கு அப்போது இருந்த அரசியல் புரிதல் காரணமாக சிறிய வசனம் தானே அதை விட்டு விடுங்கள் என்று கூறினேன் அதன் பின் இப்போதுதான் எனக்கு அது பற்றி புரிந்துள்ளது” என்று கூறியுள்ளார்.