தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஜய் ஆண்டனி. அதேசமயம் நடிப்பிலும் ஆர்வமுடைய இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே வள்ளி மயில், நூறுசாமி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், அருவி மற்றும் வாழ் ஆகிய படங்களின் இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் சக்தித் திருமகன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையும் அமைத்துள்ளார். இதில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து வாகை சந்திரசேகர், காதல் ஓவியம் சுனில், திருப்தி ரவீந்தரா, செல் முருகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அரசியல் திரில்லர் ஜானரில் உருவாகியிருந்த இந்த படம் (செப்டம்பர் 19) நேற்று தமிழில் ‘சக்தித் திருமகன்’ என்ற பெயரிலும், தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளில் ‘பத்ரகாளி’ என்ற பெயரிலும் திரையிடப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதாவது சில ரசிகர்கள் இப்படம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும், சில ரசிகர்கள் இந்த படத்தில் சில லாஜிக் மிஸ்டேக்குகள் இருப்பதாகவும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலக அளவில் ரூ.90 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் செயல் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விஜய் ஆண்டனி, ‘சக்தித் திருமகன்’ திரைப்படத்தை ரசிகர்களுடன் இணைந்து காண சென்றுள்ளார். அப்போது படத்தின் நடுவே, சமீபத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கருக்காக மௌன அஞ்சலி செலுத்தியதோடு, ரசிகர்களையும் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். விஜய் ஆண்டனியின் இந்த செயலை கண்ட பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
இது தவிர விஜய் ஆண்டனி, ரோபோ சங்கரின் இல்லத்திற்கு சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.