உறியடி விஜயகுமார் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஃபைட் கிளப். போதை பொருள் விற்றுக் கொண்டிருக்கும் இரண்டு பேர். எதிர்காலத்தில் ஒருவர் இன்னொருவரை பயன்படுத்தி அரசியல்வாதியாகிவிட அவரை பழிவாங்க துடிக்கும் நபர், நேரடியாக மோதாமல் மாற்று வழியில் ஹீரோ உறியடி விஜயகுமாரை பகடைக்காயாக பயன்படுத்துகிறார். இதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதே ஃபைட் கிளப் படத்தின் ஒற்றை வரி. வடசென்னை என்றாலே போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை என வழக்கமாக பல படங்களில் காட்டப்பட்டது போலவே இதிலும் காட்டியுள்ளனர்.
ரத்தம் தெறிக்கும் கேங்ஸ்டர் படமாக அதிரடியாக இன்னிங்சை தொடங்கிய திரைக்கதை அடுத்தடுத்து பழைய ஃபார்மட்டுக்குள் பக்குவமாக படுத்துக் கொள்கிறது. பரபரப்பான ஆக்சன் படத்துக்குள் திரைக்கதையை மெதுவாக மாற்றுகிறது தேவையற்ற காதல் காட்சிகள். அரசியல், அதிரடி என நகரும் முதல் பாதியை அட்டகாசமான இடைவேளையுடன் முடித்திருந்தனர். இரண்டாம் பாதி முழுக்க திகட்டும் அளவுக்கு ஏகத்துக்கும் சண்டை காட்சிகள். ஆனால் ஒவ்வொன்றும் ரசிக்கும் ரகமாகத்தான் இருந்தது. இறுதியில் ஓகே வகையிலான கிளைமாக்சுடன் படத்தை முடிக்கின்றனர். படத்தில் ஆபாச காட்சிகள் ஏதுமில்லை. குடும்பத்துடனே படத்தை பார்க்கலாம். ஆனால் அனேகத்துக்கும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருப்பதால் A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் பாசிட்டிவாக கதாநாயகன் ஹீரோ விஜயகுமாரின் நடிப்பைக் கூறலாம். ஆக்ஷன் காட்சிகளில் மனுஷன் பின்னிப் பெடல் எடுத்திருக்கிறார். மேலும் படத்தில் நடித்துள்ள துணை நடிகர்களின் தேர்வும் பக்காவாக அமைந்திருந்தது. மிகவும் எதார்த்தமான சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருந்த ஸ்டண்ட் மாஸ்டர்கள் விக்கி மற்றும் அபூபக்கர் பாராட்டுகளை அள்ளுகின்றனர். இவை எல்லாவற்றையும் பக்காவாக படம் பிடித்து விஷூவலாக விருந்து படைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோ. தேவையான இடங்களில் பின்னணி இசையால் தெறிக்க விடுகிறார் கோவிந்த் வசந்தா.சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு தரமான மேக்கிங் கால் மிரட்டலான படமாகத் தான் ஃபைட் கிளப் படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் அப்பாஸ். ஆனால் தீவிர சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு பார்வையாளர்களை இப்படம் திருப்தி படுத்துமா என்பது சந்தேகம் தான்.
- Advertisement -