தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பு மட்டுமன்றி இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட ஆசிரியர், பாடல் ஆசிரியர், ஆடியோ இன்ஜினியர் என பன்முகத் திறமை கொண்டவர். 2005-ம் ஆண்டு இசை அமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, 2014-ம் ஆண்டு வெளியான சலீம் படத்தின் மூலம் நடிகராக சினிமாவுக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, சலீம் இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றது.
அதன் பின்னர் 2016-ம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. நடிகர் விஜய் ஆண்டனி, நாகர்கோவிலைச் சேர்ந்த பாத்திமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மீரா, லாரா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில், மூத்த மகள் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி மீண்டும் ஒரு இசைக் கச்சேரிக்கு திட்டமிட்டுள்ளார். அதன்படி வரும் டிசம்பர் 2-ம் தேதி கோவையிலும், டிசம்பர் 16-ம் தேதி பெங்களூரிலும் டிசம்பர் 31-ம் தேதி சென்னையிலும் நடைபெற உள்ளது.