நடிகர் விக்ரம் பிரபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் கும்கி, அரிமா நம்பி, இவன் வேற மாதிரி, சிகரம் தொடு ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விக்ரம் பிரபு. இவர் தமிழில் கடைசியாக ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. அதே சமயம் தெலுங்கிலும் கால் பதித்த இவர், அனுஷ்காவுடன் இணைந்து ‘காட்டி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விக்ரம் பிரபுவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்படுகிறது. இந்நிலையில் தான் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2022 ஆம் ஆண்டில் திரைத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக விக்ரம் பிரபுவிற்கு இந்த விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் உயரிய விருதான இந்த விருது இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கௌரவம் ஆகும். வருகின்ற அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெற உள்ள விழாவில் இந்த விருதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்க உள்ளார். பல்வேறு பிரிவுகளின் கீழ் பல்வேறு கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டும் விதமாக இந்த விருது வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் விக்ரம் பிரபு இது குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “2022 ஆம் ஆண்டின் கலைமாமணி விருதை தமிழக அரசிடமிருந்து பெறுவதில் நான் பெருமையும், பணிவும் அடைகிறேன். இந்த அங்கீகாரத்திற்காக அரசுக்கும், மதிப்பிற்குரிய நடுவர் குழுவிற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் குடும்பத்தினர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சக ஊழியர்கள், நல விரும்பிகள் மற்றும் என் பார்வையாளர்கள் – உங்களின் நிலையான அன்பு மற்றும் ஊக்கத்திற்கு நன்றி. இந்த அங்கீகாரம் எனக்கு சொந்தமானது போலவே உங்களுக்கும் சொந்தமானது. சினிமா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. நான் தொடர்ந்து அதற்கு என் முழு பலத்தையும் கொடுப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.