விக்ரம் நடிப்பில் உருவாகி பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
கோலிவுட் திரையுலகின் முன்னனி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். கௌதம் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாள் நிலுவையில் உள்ளது. இதில், ராதிகா சரத்குமார்,ரித்து வர்மா, சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. விக்ரம் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். ஒன்றாக என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்
இப்படத்தின் வெளியீடு பல முறை தள்ளிப்போனது. படத்தை வௌியிடுவதில் பணப் பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருவதால், படத்தை வௌியிட முடியாமல் படக்குழுவினர் சிக்கித் தவித்து வருகின்றனர். ஒருவழியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் படத்தை வௌியிடுவதாக அறிவித்திருந்தனர். இதையொட்டி முன்னோட்டத்தையும் வெளியிட்டனர். ஆனால், முதல் நாள் இரவில் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு, பட வெளியீடு தள்ளிப்போனது.
இந்நிலையில், துருவ நட்சத்திரம் படத்தை பிப்ரவரி மாத இறுதிக்குள் வெளியிட படக்குழு முயற்சி செய்து வருகிறது. இதற்காக, 60 கோடி ரூபாய் பணத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் புரட்டியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.